புதிய இந்தியா... மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

0 1045

புதிய இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நடைபெற்ற நலத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் 26 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இது, பயனாளர்கள், சாதனங்கள் மற்றும் மதிப்பீடு வகையில் நாட்டிலேயே மிகப்பெரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது என்றார்.

தொழில்துறை, சேவைத்துறை அல்லது விளையாட்டுத் துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார். அனைத்து மக்களுக்கும் நன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் நலத்திட்ட முகாம்களை அமைத்து, அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்களை வழங்கியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments