ஓஎல்எக்ஸ் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி
ஓஎல்எக்ஸ் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த ராஜஸ்தான் கும்பலைச் சேர்ந்த இருவரைச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறிப் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ஓஎல்எக்ஸ் மூலம் ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்த பழைய கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள், கணினி, ஏசி உள்ளிட்ட பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதாக ஒரு கும்பல் விளம்பரம் செய்துள்ளது.
குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்திப் பொருட்களைப் பார்வையிடலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கான விலை மிக குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் அதனை வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் என்கிற நம்பிக்கையில் பலர் ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை முன்பணம் செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
முன்பணம் செலுத்தி நாட்கள் கடந்த நிலையிலும் வாகனங்கள் மற்றும் பொருட்களைக் காட்டவில்லை என அந்தக் கும்பலைத் தொடர்பு கொள்ள முயன்ற போது தான் ஓஎல்எக்சில் இருந்து மோசடி கும்பலின் அக்கவுண்ட் டி ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக புகார்கள் குவிந்துள்ளன.
சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ளன. இணையவழிப் பணப்பரிமாற்றச் செயலி மூலம் இந்த மோசடி நடைபெற்றுள்ளதால், இணையவழிக் குற்றப் பிரிவு மூலம், பணம் சென்ற வங்கிக் கணக்கைச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவினர் கண்டுபிடித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் துநாவல் என்ற ஊரில் உள்ளவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்துத் தீரன் படப் பாணியில் கூடுதல் இணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படையினர் ராஜஸ்தானுக்குச் சென்று நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
துநாவல் ஊரில் பெரும்பாலோர் இணையத்தளம் வழியாகப் பணத்தை மோசடி செய்ததும், அதைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments