டாட்டூ குத்தியதால் பார்வையை இழந்த இளம்பெண்...
உடலின் அங்கங்களில் டாட்டூ குத்தி கொள்வது என்ற வழக்கம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கண்ணில் டாட்டூ போட்டு கொண்டதால், பார்வையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்ஸாண்ட்ரா சடோவ்ஸ்கா ( Aleksandra Sadowska ) என்ற 25 வயதான பெண் மாடலிங் துறையில் உள்ளார். இவர் போபெக் என்ற போலந்து ராப் பாடகரின் தீவிர ரசிகை. பிரபல ராப் பாடகரான போபெக், தனது 2 கண்களிலும் கருமை நிற டாட்டூ போட்டு கொண்டுள்ளார்.
போபெக்கின் தீவிர ரசிகையான அலெக்ஸாண்ட்ரா தானும் இரு கண்களிலும் டாட்டூ போட்டு கொள்ள ஆசைப்பட்டார். இதனை அடுத்து பியோட்ர் (Piotr) என்ற டாட்டூ கலைஞரை அணுகியுள்ளார். இவருக்கு கண்களில் டாட்டூ போட்டு பழக்கம் இல்லை என கூறப்படுகிறது.
எனினும் வருமானத்தை விட்டு விட கூடாது என்பதற்காக, அலெக்ஸாண்ட்ராவின் இரு கண்களிலும் கருமை நிற டாட்டூ போட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே கண்களில் வலியும், எரிச்சலும் இருப்பதாக கூறியுள்ளார் அலெக்ஸாண்ட்ரா. இது வழக்கமான ஒன்று தான், வலி நிவாரணி எடுத்தால் சரியாகி விடும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் டாட்டூ குத்திய சில மணி நேரங்களில் வலது கண்ணில் பார்வையை முழுமையாக இழந்துள்ளார் அலெக்சாண்ட்ரா. இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து விரைவில் அதிலும் பார்வையை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் டாட்டூ கலைஞர் பியோட்ர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments