துணை ஆட்சியர் வீட்டில் கட்டு கட்டாக ரூ. 76 லட்சம் சிக்கியது
வேலூர் காட்பாடியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தியதில் கட்டு கட்டாக 76 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது.
வேலூர் மாவட்டம் இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்ஜித்குமார். இவர் தனது நில பத்திரத்தை விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்திருந்தார்.
இதற்காக அங்கு முத்திரைத்தாள் தனித் துணை ஆட்சியராக பணியாற்றும் தினகரன் அவரிடம் காரில் வைத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காரில் பணத்துடன் புறப்பட்ட போது, அங்கு தகவலறிந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை மடக்கி தினகரனை கைது செய்தனர். கார் மற்றும் அலுவலகத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் ரமேசும் கைதானார்.
இந்த நிலையில் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள தினகரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் இரும்பு பெட்டியில் கட்டுகட்டாக ரூபாய் 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.
மேலும் போளூர் அருகே உள்ள தினகரனின் சொந்த ஊரில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக தினகரன் பணியிட மாற்றம் செய்த பின்னரும் மாறுதல் ஆகாமல் இருந்துள்ளது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
Comments