பெண் மர்மமான முறையில் கொலையாகிக் கிடந்த விவகாரம் - 3 பேர் கைது

0 6341

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கணவரை இழந்த பெண் கொலையான சம்பவத்தில், அவரோடு தவறான தொடர்பில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த இளைஞனால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற பெண்ணை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த தப்பகுட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகளோடும் மாமியாரோடும் வசித்த அந்தப் பெண்,  தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை அந்தப் பெண்ணின் சடலம் தலையில் அடிபட்ட நிலையில், அங்குள்ள புதர் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக பெண் தொழிலாளி ஒருவரின் மகனான பார்த்திபன் என்ற 21 வயது இளைஞனோடு, 30 வயதான அந்தப் பெண்ணுக்கு தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அவ்வப்போது பார்த்திபன் அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று தான் கொடுத்த பணத்தை பெண்ணிடம் கேட்டுள்ளான் பார்த்திபன். பணத்தை தர முடியாது என்று வாக்குவாதம் செய்த அந்தப் பெண், தங்களுடைய தவறான தொடர்பு குறித்து பார்த்திபனின் தாயாரிடம் தெரிவித்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், அந்தப் பெண்ணை இடித்துத் தள்ளியதில் அருகிலிருந்த கல்லில் தலை மோதி மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக எண்ணி, பார்த்திபன் அங்கிருந்து ஓடிவிட, சிறிது நேரத்தில் அவ்வழியே முழு போதையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவனும் பழனிசாமி என்பவனும் வந்துள்ளனர். மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணின் நிலை தெரியாமல் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கிய நிலையிலேயே அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார்.

பார்த்திபன், பழனிசாமி, ரவி ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

 



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments