இந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..!
இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியபின் வணிகம், தொழில் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் ஷாங்காய், டோக்கியோ, சியோல், ஹாங்காங் பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்தன.
பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதால், இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டன.
இந்த வார தொடக்கத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு நாளுக்கு நாள் இழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 புள்ளிகளாக இருந்தது.
ஐ.டி.சி நிறுவனத்தைத் தவிர மற்ற நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி நேற்று 414 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 219 ஆக இருந்தது.
இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும் பங்குகளின் மதிப்பு 5 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்தது. இந்த அளவுக்கு சரிவு ஏற்பட்டது கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.
கடந்த 6 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 872 புள்ளிகள் சரிந்ததால் பங்குச்சந்தைகளில் 11 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் மருந்து, மாத்திரைகள், உபகரணங்களை இருப்பு வைக்க தொடங்கி விட்டன.
கொரோனாவால் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வரை உலக அளவில் பொருளாதார மந்த நிலை நீடிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Comments