கத்தியும் செருப்பும் காதல் போராளியும்..! சுருதி குறையாத ஸ்ருதி

0 3379

திருமண மோசடி வழக்கில் கைதான நடிகை ஸ்ருதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடி போனால் ஆவணி" என்ற திரைக்கு வராத படத்தில் நடித்திருந்த 21 வயது இளம் நடிகை ஸ்ருதி. திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மோசடி கிளி ஸ்ருதி, ஜாமீன் பெற்று ஸ்காட்லாண்டு நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி படித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 2015- ம் ஆண்டு முதல் இவரை காதலித்து வந்ததாக கூறப்படும் சென்னை- முகப்பேரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் மகன் அமுதன், ஸ்ருதியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அமுதனுக்கு ஸ்ருதி பச்சை கொடி காட்டாததால் வெறுப்படைந்த காதல் போராளி அமுதன் தனது காதலை நிரூபிக்க கழுத்தில் கத்தியை வைத்து ஸ்ருதிக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.

அதற்கு நடிகை ஸ்ருதியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் விரக்தி அடைந்த காதல் போராளி அமுதன் தனது செருப்பை கழற்றி தன்னை உச்சந்தலையில் அடித்து மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்

ஸ்ருதி இன்னும் சில தினங்களில் தமிழகம் திரும்ப இருக்கும் நிலையில், தனக்கு கிடைக்காத ஸ்ருதி யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் சுற்றிவரும் அமுதன், அவரது முகத்தில் ஆசிட் வீசப்போவதாக மிரட்டி வருவதாக ஸ்ருதியின் தாயார் சித்ரா, மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து காதல் போராளி அமுதனையும் , காதலுக்கு துணையாக இருந்த அவரது தந்தையையும் அழைத்து விசாரித்த காவல்துறையினர் விபரீத எண்ணத்தை தடுக்கும் பொருட்டு இருவரையும் கைது செய்துள்ளனர்

ஏற்கனவே பல இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து பைத்தியமாக்கி அலையவிட்ட குற்றச்சாட்டிற்குள்ளான நடிகை ஸ்ருதி இன்னமும் பழைய சுருதி குறையாமல் வலம் வரும் நிலையில், 5 வருடமாக காதலித்து, ஒரு கட்டத்தில் போராளியாக மாறியதால் இளைஞர் அமுதன் , தந்தையுடன் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது சோகம் என்கின்றனர் அவரது நண்பர்கள்.

அதே நேரத்தில் விஞ்ஞானியாகி " நாசா" வுக்கு செல்ல வேண்டிய தனது மகளின் கனவை, அமுதன் போன்றோர் நாசமாக்குவதாக சித்ரா தெரிவித்திருப்பது தான் உச்சகட்ட டுவிஸ்ட்..!

ஸ்ருதி மட்டும் அல்ல புகார் கொடுத்த தாய் சித்ராவும் திருமண மோசடி வழக்கில் கைதாகி, சிறை சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments