குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்களின் குடியுரிமை ஒருபோதும் பறிக்கப்படாது - அமித் ஷா
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பி எதிர்க்கட்சிகள் வன்முறையைத் தூண்டி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காரணமாக எந்தவொரு நபரின் குடியுரிமையோ அல்லது முஸ்லிம்களின் குடியுரிமையோ பறிக்கப்படாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பறிக்கும் நோக்கில் அந்தச் சட்டம் இயற்றப்படவில்லை என்றும், முஸ்லிம்களின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத ரீதியிலான வன்முறையைத் தூண்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று வலியுறுத்திய அமித்ஷா, இப்பிரச்னையை எழுப்பி வருபவர்களிடம் குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டவிதி எங்கே உள்ளது என கேள்வி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். காந்தி, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களின் விருப்பங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளதாக அமித்ஷா மேலும் தெரிவித்தார்.
Comments