கொரானா பரவிடக்கூடும் என்ற அபாயம் - இந்தியா உஷார்
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 2ஆவது நாடாக இந்தியா திகழ்கிறது. அடர்த்தியான மக்கள் தொகை, பல மாநிலங்களில் மோசமான சுகாதார பராமரிப்பு முறை, கூலி வேலை உள்ளிட்ட பணிகளுக்காக, அதிகமானோரின் இடப்பெயர்வு ஆகிய முக்கிய காரணிகளை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது.
கொரானா போன்ற தீவிரமான நோய் தொற்றுகளுக்கு மிக முக்கிய எதிரியான வெப்பம், வழக்கம்போல், இந்தியாவிற்கு கைகொடுத்து வருகிறது. இருப்பினும், சீனாவிலிருந்து வந்த 3 பேர் கொரானா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், 23,531 பேர் கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவ ஆய்வார்களில் ஒருதரப்பினர், இருமல், தும்மல் மூலம் எளிதாக பரவும் கொரானா, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். மற்றொரு தரப்போ, முக்கிய எதிரியான வெப்பத்தை சுட்டிக்காட்டி, அதன் தாக்கம் பெரியளவில் இருக்காது என நம்பிக்கை அளிக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து, யார் வந்தாலும், அவர்களுக்கு கொரானா அறிகுறி பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே, இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) தெரிவித்துள்ளார்.
கொரானா பாதித்த நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளிலும், விமான நிலையங்களில் நடைபெறும் நோய்தொற்று தடுப்பு பணிகளிலும், அனைத்து துறையினரும் இணைந்து இடைநிற்றலின்றி பணியாற்றி வருவதாகவும், மத்தியமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
Comments