அம்மா உணவகங்கள் சிறப்புடன் செயல்பட நடவடிக்கை

0 3035

சென்னை மாநகரில் இயங்கும் அம்மா உணவகங்கள், மீண்டும் முன்புபோல இயங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன் ஒரு கட்டமாக,
இங்கு பணியில் இருக்கும் பொறுப்பாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு - சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்த " அம்மா உணவகம்" திட்டம், அவரது மறைவுக்குப்பின், சில பல காரணங்களால் பின்னடைவை சந்தித்துள்ளதாக பரவலாக செய்தி வெளியாகி இருந்தது. 

இதனை சரி செய்யவும், அம்மா உணவகங்களை மீண்டும் புதிய பொலிவுடன் நடத்தவும் தேவையான அனைத்துப் பணிகளும், இப்போது, முழு வீச்சில் துவங்கி உள்ளன.

சுகாதாரமற்ற உணவு பொருட்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், இதனை தடுக்கவும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளவும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் சுய உதவிக்குழு பெண்களுக்கு, சென்னையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பங்கேற்று பயிற்சி அளித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சமையல் அறைக்குள் ஈக்கள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நுழையாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இங்கு பணியாற்றும் ஒவ்வொருவரும், தங்கள் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் - பெண்கள், தலையில் பூ வைக்க கூடாது - கையில் கண்ணாடி வளையல் அணியக்கூடாது - தலை முடி வெளியே தெரியாத வகையில், பாலிதீன் கவரால் மூடி, மறைத்திருக்க வேண்டும் என பல நடைமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

இருந்த போதிலும், சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை தயாரித்து, அதனை வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் சிறப்பாக விநியோகித்தால், நிச்சயம் நோய் பரவுவதை தடுக்க முடியும் என அம்மா உணவக பொறுப்பாளர்களுக்கு, பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

இந்த பயிற்சி முகாமில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்களின் பொறுப்பாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இருள் நீங்கி, ஒளி வீச, ஒரு சிறு மெழுகுவர்த்தி இருந்தால் கூட போதுமானது. அந்த வகையில், அம்மா உணவகங்கள் முன்பு போல, மீண்டும் ஜொலிக்க, இந்த பயிற்சி, தங்களுக்கு உதவியாக அமைந்துள்ளதாக பயிற்சி பெற்ற பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுமா? என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments