டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ள நிலையில், கலவர பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடந்த ஞாயிறுன்ற டெல்லியில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 500 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசல்களில் நடந்த சிறப்புத் தொழுகைக்கு போலீசாரும் துணை ராணுவத்தினரும் கூடுதல் பாதுகாப்பு அளித்தனர்.
கலவரம் பாதித்த இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடைகள் திறக்கப்பட்டன. சிறிய எண்ணிக்கையிலான தனியார் வாகனங்கள் சாலைகளில் ஓடின. இதனிடையே சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வித த்தில் பேசியதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தாக்கலான மனுவில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
உளவுத் துறை ஊழியர் அங்கித் சர்மா கொலை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் ஹுசேன் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக நீதிமன்றங்கள் விமர்சித்த டெல்லி காவல்துறையின் ஆணையர் அமுல்யா பட்நாயக் நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த பொறுப்பு மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரி ஸ்ரீவாத்சவாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டியது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அவற்றை தந்து உதவுமாறு பொதுமக்களுக்கு டெல்லி போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கலவரம் பற்றி விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்துள்ளனர்.
Comments