தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவது ஏன் ??

0 4440

இன்று தேசிய அறிவியல் தினம்

உலகின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் இன்றியமையாத தேவையாக உள்ளன. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனித சமூகத்தை அடுத்த பரிமாணத்திற்கு நகர்த்துகிறது. அப்படி நிறைய கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு துணையாக இருந்துள்ளன.

இந்தியாவின் வளர்ச்சியிலும் அறிவியல் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. அந்தவகையில் இந்திய விஞ்ஞானிகளில் உலகிற்கு மிக உன்னதமான கோட்பாட்டை அளித்தவர் சர்.சி.வி.ராமன். ஒளியியல் துறையில் அவரின் கண்டுபிடிப்பை ”ராமன் விளைவு” என்று அறிவியல் உலகம் அழைக்கின்றது. அவர் ராமன் விளைவை கண்டுபிடித்ததன் நினைவாக இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கடைபிடித்து வருகிறது.

image

ஒளி குறித்து பல காலகட்டத்தில் பல்வேறு அறிஞர்கள் பல கருத்துக்களை கூறியுள்ளனர். ஒளி என்பது துகள்களால் ஆனது என ஐசக் நீயூட்டன் கூறினார். நீயூட்டனின் கூற்றை மறுத்து ஒளி என்பது அலைகளால் ஆனது என தாமஸ் யங் கூறினார்.

இப்படி ஒளி குறித்து பல்வேறு கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் கூறிவந்தனர். மேலும் ஒளி குறித்து பல ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த நிலையில் ராமன் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார். அதாவது ”ஒளியானது திரவம், வெப்பம், வாயு மற்றும் திடப்பொருள்களின் வழியே செல்லும் போது ஒளியின் தன்மை மாறுபடுவதாக” கூறினார்.

அதாவது ”ஒரு ஒற்றை ஒளிக்கற்றையை ஒரு ஊடகத்தின் வழியாக செலுத்தும் போது அது சிதறி பல்வேறு ஒளிக்கதிர்களாக மாறும்” என கூறினார். இதை தான் ”ராமன் விளைவு” என கூறுகின்றோம். ராமனின் இந்த கூற்றை அறிவியல் உலகமும் ஏற்றுகொண்டது.

மேலும் 1930 ல் ராமன் இந்த கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார். தமிழகத்தில் பிறந்த சர்.சி.வி.ராமன் ஆசியாவிலேயே நோபல் பரிசை வென்ற முதல் நபராவார். மேலும் இந்திய அரசின் உச்சபட்ச விருதான பாரத ரத்னாவையும் அவர் பெற்றுள்ளார்.

image

இன்றளவும் ராமனின் கூற்றை அடிப்படையாக வைத்து பல்வேறு துறைகளில் பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உன்னத கண்டுபிடிப்பை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை கொள்கையாக கொண்டு தேசிய அறிவியல் தினத்தை பிப்ரவரி 28 அன்று கொண்டாடிவருகிறது.

இந்த ஆண்டு அறிவியலில் பெண்கள் எனும் தலைப்பில் கொண்டாடுகிறது. மேலும் இந்த நாளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது எனும் நோக்கத்துடன் தேசிய அறிவியல் தினம் 1987 முதல் கொண்டாடப்படுகிறது.

இன்றைய காலத்தில் மனிதனின் வளர்ச்சியில் பல்வேறு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகின்றன. மேலும் நம்முடைய வாழ்வை எளிமையானதாகவும், அறிவுவாய்ந்ததாகவும் மாற்றி உள்ளது. எனவே ஆக்கப்பூர்வமான பல கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நம் சமூகத்தை ஒரு மகத்தான வாழ்வை நோக்கி பயணிக்க செய்வோம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments