”திரௌபதி” - கொண்டாட்டமும் முற்றுகையும்..!

0 4850

சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள தியேட்டர்களில் திரௌபதி படம் வெளியாகாததைக் கண்டித்து, மற்ற திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை நிறுத்த சொல்லி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

” வண்ணாரப்பேட்டை” படத்தை இயக்கிய ஜி. மோகன் இயக்கத்தில் திரௌபதி திரைப்படம் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் எந்தத் திரையரங்கிலும் படம் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், மற்ற படங்களும் ஓடக்கூடாது எனக் கூறி நகரிலுள்ள பிற திரையரங்குகளை முற்றுகையிட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய திரையரங்கு உரிமையாளர்கள், பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எஸ். திரையரங்கில் திரௌபதி படம் திரையிடப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்தப் பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளிலும் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  

இது ஒருபுறமிருக்க, தேனி மாவட்டம் கம்பத்தில் திரௌபதி திரைப்படம் வெளியான திரையரங்குக்கு ஊர்வலமாக வந்த சில அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மேளதாளத்துடன் திரையரங்கு முன்பு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தருமபுரி நகரில் திரௌபதி திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் திரையரங்கு முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என்ற அச்சத்தால் அங்குள்ள மாதேஸ்வரா திரையரங்கில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாமக நிர்வாகிகள் திரையரங்கு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், 2 மணி நேர தாமதத்துக்குப் பின் படம் திரையிடப்பட்டது.

அதற்குள் திரையரங்கு முன் ஆட்டம்பாட்டத்துடன் குவிந்திருந்த ரசிகர்களில் சிலர், அங்கிருந்த திரௌபதி திரைப்பட சுவரொட்டிகள் மீது பாலை ஊற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments