அமைதி நிலைக்கு திரும்பும் டெல்லி
கலவரம் வெடித்த வட கிழக்கு டெல்லியில் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாத நிலையில் அமைதி படிப்படியாக திரும்பி வருகிறது. இருந்தாலும் அங்கு நிலவரத்தை கட்டுக்குள் வைக்க கூடுதலாக 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு - எதிர்ப்பு போராட்டக்காரர்களால் ஜாப்ராபாத்,மாவ்ஜ்பூர் (Jafrabad, Maujpur ) உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஞாயிறு வெடித்த வன்முறை அடுத்த 3 தினங்களில் தீவிரமடைந்தது. இந்த கலவரங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை நடத்தியவர்கள் மற்றும் அதைத் தூண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் 514 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமது துறைச் செயலர் அஜய் குமார் பல்லா, டெல்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாகவும் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள 203 காவல் நிலையங்களில் 12 நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே கலவரம் வெடித்ததாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இயல்பு நிலையை மீட்கும் வகையில் ஆங்காங்கு அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. அதே சமயம் கலவரங்களில் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஊரடங்கு உத்தரவு 10 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது..
இதனிடையே, டெல்லி கலவரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஆமோதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுவிட்டரில் இதை குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். வன்முறையை கைவிட்டு சமாதானத்தின் பக்கம் திரும்புமாறு டெல்லி மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
35 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருக்கும் இடையூறை அகற்றக் கோரினால் தன்னைத் தீவிரவாதியாகவும், வில்லனாகவும் சித்தரிப்பதாக பாஜகவின் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறைக்குக் கபில் மிஸ்ராவின் பேச்சே காரணம் எனக் குற்றஞ்சாட்டும் பலரும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கபில் மிஸ்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகளையும் கற்குவியலையும் குவித்து வைத்திருந்தவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை என ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசைன் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். இதனிடையே உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலையில் தாகீர் உசைனுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுக் கூறப்பட்டதால் அவர் மீது தயாள்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மிக் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லி உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேல் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. வன்முறை பாதித்த சந்த் பாக் என்னுமிடத்தில் கழிவுநீர்க் கால்வாயில் இருந்து உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் எடுக்கப்பட்டது. வன்முறையாளர்கள் அவரைக் கொன்று உடலைக் கால்வாயில் போட்டுள்ளனர்.
அவர் உடலைக் கூறாய்வு செய்ததில் பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்துள்ளன. உடல் முழுவதும் சிராய்ப்புகளும், ஆழமான வெட்டுக்காயங்களும் காணப்படுவதாகக் கூறாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தொடர்ந்து பலமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி வன்முறையில் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் தஞ்சமடைந்து குழந்தை பெற்ற பெண், வன்முறையாளர்கள் தன்னை வயிற்றில் எட்டி உதைத்ததாகத் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் கரவால் நகரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது நிறைமாதக் கர்ப்பிணியான சபனா பர்வீனை வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர்.
குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பி வெளியேறிய சபானா பர்வீன் அல் ஹிந்த் மருத்துவமனையில் சேர்ந்து ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். வன்முறையில் இருந்து தப்பி வந்து அதிசயக் குழந்தை பிறந்துள்ள போதும், பர்வீனின் வீடு வன்முறையாளர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் அடுத்து எங்கே செல்வது என்கிற கவலையுடன் அவர் குடும்பத்தினர் உள்ளனர்.
டெல்லி கலவர சம்பவங்களின் பின்னணியில் மாநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரி எஸ்.என். ஸ்ரீவாத்ஸவா (SN Srivastava) நியமிக்கப்பட்டுள்ளார். அமுல்யா பட்நாயக்கிற்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு நாளை முடிவடைகிறது
டெல்லி கலவரத்தை அடக்குவதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டது என நீதிமன்றங்கள் விமர்சித்த நிலையில், கலவரத்தை அடக்குவதற்காக கடந்த செவ்வாய் அன்று சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட ஸ்ரீவாத்ஸவா, டெல்லியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் சி.ஆர்.பி.எஃப்-ன் கூடுதல் தலைமை இயக்குநராக அவர் இருந்தார்.
Comments