உலகம் முழுவதும் பரவிய கொரோனா..உயிரிழப்பு 2,850 ஆக உயர்வு

0 2559

கொரோனா வைரஸ் 53 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 850ஐக் கடந்துள்ளது. இத்தாலியில் தொடங்கி அண்டை நாடுகளுக்குப் பரவி வருவதால் ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

சீனாவின் வூகான் நகரை மையமாக கொண்டு உருவான கொரோனா வைரசின் கோர முகம் உலகம் முழுக்க வெளிப்பட்டுவருகிறது. அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களையும் தாக்கியுள்ள கொரானா, இதுவரை 53 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஊடுருவியுள்ளது. 82 ஆயிரம் பேரை தாக்கியுள்ள கொரானா, 2850க்கும் அதிகமானோரின் உயிரைக் குடித்துள்ளது.

கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் மட்டும் சுமார் 78 ஆயிரத்து 500 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 744 பேர் கொரானாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான தென் கொரியாவில், சுமார் 1,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டில் வேகமாக பரவிவரும் கொரானாவால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 650 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவின் 11 நாடுகள் கொரோனாவின் பிடிக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மெக்கா மற்றும் மதினாவுக்கு வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ளவேண்டாம் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினருக்கு இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்ததாகவும், 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் துணை அதிபர் மசூமே எப்டகர், அந்நாட்டு துணை சுகாதார அமைச்சர் இராஜ் உள்ளிட்ட பலர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரானா அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே மாதம் நடைபெறுவதாக இருந்த எஃப்-8 எனும் வருடாந்திர ஃபேஸ்புக் டெவலப்பர்கள் மாநாடும், ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்டவை மூலம் மாநாட்டை நடத்திக்கொள்ள பேஸ்புக் முடிவுசெய்துள்ளது.

கொரானா தொற்றை அடுத்து இத்தாலி, ஈரான் மற்றும் கொரியாவுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குடியேற்றப் பிரிவு, அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments