டெல்லி வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

0 2540

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை காவல்துறை அமைத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே, வடகிழக்கு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 38 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 500க்கும் அதிகமானோர் குருதேக் பகதூர், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண், ஜே.பி.சி. ஆகிய 3 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

போலீஸ் தரப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், உயர் அதிகாரிகள் உள்பட 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பாபர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலவரம் தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர சந்தேகத்தின் பேரில் 514 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பியுள்ளதாகவும், 36 மணி நேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, டெல்லியின் வட கிழக்குப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்று 10 மணி நேரம் தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 கலவரம் தொடர்பான விசாரணை நடத்த இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன. துணை ஆணையர்கள் தலைமையிலான இந்தக் குழுக்களில் தலா 4 உதவி ஆணையர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரசின் திட்டத்தின்கீழ் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வன்முறைக்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments