இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜர்

0 1656

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது  நடந்த விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக இயக்குநர் சங்கர் சென்னை காவல் ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார். 

சென்னை அருகே உள்ள நசரத்பேட்டையில் கடந்த 19ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் உடைந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் . 10 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக லைக்கா திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் உட்பட 4 பேர் மீது நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இணை இயக்குநர் பரத்குமார் அளித்த புகாரில் லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுத் துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நேர்ந்த இடத்தில் தானும் இயக்குநர் சங்கரும் இருந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் இன்று சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். காவல் ஆணையர் விசுவநாதன் முன்னிலையில் மத்தியக் குற்றப்பிரிவினர் இயக்குநர் சங்கரிடம் விசாரணை நடத்தினர். தொழில்துறைக்குப் பயன்படுத்தும் கிரேனைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியது தொடர்பாக இயக்குநர் சங்கரிடம் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments