கொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…! எச்சரிக்கும் ஏலியன் சித்தர்..

0 9530

ஜோதிடத்தின் மூலம் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி அலம்பல் செய்த ஏலியன் சித்தர் ஒருவர்,  கொரானா என்ற பெயர் ராசிக்கு ஏற்ப 18 மூலிகைகளால் மருந்து தயாரித்து இருப்பதாக கூறி காமெடி செய்தார்

கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 2 வருட காலம் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தேங்காமுடி வைத்தியர்கள் பலர் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக மூலிகைப் பொடியுடன் கிளம்பி வந்து விடுகின்றனர்.கொரானா வைரஸ் குறித்த எந்த புரிதலும் இன்றி கொரானாவுக்கு எண்கணித ராசிப்படி 18 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்திருப்பதாக கூறி ஏலியன் சித்தர் சிங்காரவேலு செய்த அலம்பல்கள் புதுரகம்..!

அந்தவகையில் கிரகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்ததாக கதை அளந்துவிட்டதால் ஏலியன் சித்தர் என்று அன்போடு அழைக்கப்படும் சிங்காரவேலு, கொரானாவுக்கு எண் கணித அடிப்படையில் மருந்து கண்டுபிடித்து இருப்பதாக கூறி அனைவரையும் சிரிக்கவைத்தார்

பிறந்த சில நிமிடங்களில் தனது இரு கண்களும் திறந்துவிட்ட நிலையில், அண்மையில் காளஹஸ்தி சென்றிருந்த போது 3 வதாக ஞானக்கண் திறந்ததாகவும், அந்த கண் மூலமாக கொரானா பரவுவதற்கு ராகுவும், கேதுவும் தான் காரணம் என்பதையும் அதனை குணமாக்கும் மூலிகை மருந்தையும் கண்டுபிடித்து இருப்பதாக கூறினார் சித்துவேலை சிகாமணி சிங்காரவேலு..!

கொரானா என்றால் என்ன ? எதனால் ஏற்படுகிறது? அது பரவக் காரணம் என்ன ? என எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாத இந்த பித்தசிகாமணி சிங்காரவேலு தான், 3 கேன்களில் கொண்டு வந்திருந்த பெயர் தெரியாத மூலிகை கசாயங்களை சிறிய அளவுள்ள கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி பரிசோதனை எலி போல தானே குடித்துக் காண்பித்தார்..!

அரசுத்துறை அதிகாரிகளிடமோ, சுகாதாரத் துறையிடமோ இந்த புதிய மருந்து பற்றி சொல்லலாமே என்றதற்கு மீடியாவில் சொன்னால் போதும் உலகம் முழுவதும் உடனே சென்று விடும் என்பதால் ஸ்டெரய்ட்டா 16 வது கேள்விக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார் சித்தன் சிங்காரவேலு..!

நாசா விஞ்ஞானி ரேஞ்சுக்கு கதைவிட்ட சித்தர் சிங்காரவேலுவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உன்னை நினைத்து படத்தில் வரும் போலி ஜோதிடர் மெய்மெய்யப்பனை நினைவுபடுத்துவது போலவே இருந்தது

 

நடிகர் சங்க கட்டடத்திற்கும், விஷால் பொறுப்பு வகித்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வாஸ்து சொன்னதே தாம்தான் என்று தெரிவித்தவரிடம், விஷால் பதவியிழக்க காரணமும் நீங்கள்தானா என கேள்வி எழுப்பியபோது திணறிப் போனார் சிங்காரவேலு.

ஜோதிடக்கலை என்பது காலத்தை கணிக்கும் மகத்தான கணித அறிவியல்..! அதனை முழுமையாகக் கற்றறியாத தற்குறிகள் செய்யும் இதுபோன்ற குட்டிச் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உண்மையிலேயே கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் தைரியமாக சீனாவுக்கு செல்லலாம் அதைவிடுத்து மீடியாக்களை சந்திப்பது வெற்று விளம்பரத்திற்காக மட்டுமே..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments