டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

0 3699

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் தொடரும் கலவர சம்பவங்களுக்கு இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கலவரத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது.

சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

இந்த மோதல் சம்பவத்தில் தலைமை காவலர் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.நேற்றும் டெல்லியின் பல இடங்களில் கலவர சம்பவங்கள் நீடித்தன. இதில் மேலும் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. 

 கலவரத்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே இஸ்லாமிய அமைப்புகள் நேற்று இரவு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தின. கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர். அவர்களை டெல்லி போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். 

கலவரம் தொடர்பான வழக்கை நேற்று இரவு அவசரமாக விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லியில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் கலவரத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 இந்நிலையில், குரு தேஜ்பகதூர் மருத்துவமனைக்கு இன்று காலை கலவரத்தில் பலியான 4 பேரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன. இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலியாகினர். இதனால் கலவர பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கோகுல்புரியில் பழைய இரும்பு கடைக்கு கும்பல் ஒன்று இன்று காலை தீ வைத்தது. இதையடுத்து அதை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டுப்படுத்தினர். கலவரம் தொடர்வதால் வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட காவல்துறையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸாரால் இயலவில்லை என்பதால், ராணுவத்தை அனுப்பக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுத போவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல்லியின் கிழக்கு பகுதியில் பதற்றம் நிறைந்த இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவும், இன்று காலையும் நேரில் ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து டெல்லிக்கு இந்தோ திபெத் எல்லை போலீஸ், சிஆர்பிஎப், பிஎஸ்எப் படை பிரிவு உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 45 கம்பெனி படைபிரிவினர் நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் டெல்லி போலீஸாருடன் இணைந்து பதற்றம் நிறைந்த இடங்களில் பாதுகாப்புப் பணியிலும், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடைபெற்றது

டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான பொறுப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலிடம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. 3 நாள்களாக கலவரம் தொடர்வதை கருத்தில் கொண்டு, அதை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க அஜித் தோவாலை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிறகு, மூத்த காவல்துறை அதிகாரிகளுடனும் தோவால் ஆலோசனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments