இந்தியா - அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

0 4619

பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஹைதரபாத் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் இருவரையும் அங்கு பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, மக்களிடையேயான பிணைப்புகள் என இந்திய-அமெரிக்க உறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சு நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும், வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேர்மறையான பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளுக்கு சட்டபூர்வ வடிவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்த்திற்கான பேச்சுவார்த்தையை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், இந்திய மக்கள் காட்டிய தனிச்சிறப்பான அன்பும், வரவேற்பும் தன்னையும் மெலனியா டிரம்பையும் அளவற்ற மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக கூறினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பை மறக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

மத அடிப்படைவாத பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதில் தானும் பிரதமர் மோடியும் உறுதியாக இருப்பதாக கூறிய டிரம்ப், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாட்டுடனும் ஆக்கபூர்வமாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என தான் நம்புவதாகவும், அத்தகைய விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

தாம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், உயர்தரமான எரிசக்தி துறை ஏற்றுமதி 500 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். 5ஜி தொழில்நுட்பத்தின் தேவை, முக்கியத்துவம் குறித்து விவாதித்தாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments