டாடா குழுமம் Vs தொலைத்தொடர்பு துறை... ஏஜிஆர் நிலுவை எவ்வளவு?
அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகை, தொலைத்தொடர்பு துறை கூறுவதுபோல 13 ஆயிரத்து 823 கோடி ரூபாய் அல்ல என்றும், 2 ஆயிரத்து 197 கோடி ரூபாய் மட்டுமே என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
ஏஜிஆர் எனப்படும் புதிய வருவாய் பங்கீட்டு முறையின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், தாங்கள் செலுத்த வேண்டி தொகை 2 ஆயிரத்து 197 கோடி ரூபாய் மட்டுமே என்றும், அதையும் ஏற்கெனவே செலுத்திவிட்டதாகவும் டாடா குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தொலைத்தொடர்பு துறைக்கு தெரிவித்திருந்தது.
ஆனால், தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, டாடா டெலிசர்வீசஸ் செலுத்த வேண்டிய தொகை 13 ஆயிரத்து 823 கோடி ரூபாயாகும். இந்த தொகையை செலுத்துமாறு டாடா குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தொலைத்தொடர்பு துறைக்கும் டாடா குழுமத்திற்கும் இடையே உரசல் ஏற்படும் என்றும், அது மறைமுகமாக ஏர்டெல் நிறுவனத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ஏற்கெனவே ஏர்டெல் கையகப்படுத்திவிட்ட நிலையில், கூடுதல் தொகையை செலுத்துமாறு அந்நிறுவனம் கேட்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments