டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்களிடையே மோதல் - 7 பேர் பலி
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ சட்ட எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே நேரிட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலவும் பதற்றத்தால் வடகிழக்கு டெல்லியின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதியின் பல இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தின்போது ஜாப்ராபாத்தில் இருதரப்பினர் இடையே திடீரென மோதல் மூண்டு, பரஸ்பரம் கற்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
மாஜ்பூரில் 3 வாகனங்களுக்கும், வீடு ஒன்றுக்கும் தீ வைத்த கும்பல், கையில் சிக்கிய நபர்களையும் சரமாரியாக தாக்கியது.
பாஜன்புராவில் பெட்ரோல் விற்பனை நிலையம், பள்ளி பேருந்து ஆகியவற்றுக்கு தீ வைத்த கும்பல், பாஜன்புரா செளக்கில் தீயணைப்பு வண்டியை அடித்து நொறுக்கியது.
தகவலின்பேரில் சம்பவ இடங்களுக்கு விரைந்த டெல்லி போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் ரத்தன் லால் என்ற தலைமை காவலரும், மேலும் 4 பொதுமக்களும் நேற்று பலியாகினர். இதுதவிர்த்து மோதலில் போலீஸார், செய்தியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் காயமடைந்தனர். காவல்துறை கூடுதல் ஆணையர் அமித் சர்மா என்பவர் பலத்த காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தோரில் 2 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்திருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள சில இடங்களில் இன்று 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாப்ராபாத், மெளஜ்புர், பாபர்பூர், கோகுல்புரி, ஜோஹ்ரி என்கிளேவ், சிவ் விஹார் ஜாப்ராபாத், மாஜ்பூர்-பாபர்பூர், கோகுல்புரி, ஜோஹ்ரி என்கிளேவ், சிவ் விஹார் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, ரோந்து சுற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியிலுள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உயர்நிலை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவு ஒரு மாதம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டத்தின்போது கைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞரை அடையாளம் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் நேற்று நடைபெற்ற மோதலின்போது போலீஸாரை நோக்கி சிவப்பு நிற டி சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் கைத் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகியிருந்தன. இதை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், அந்த இளைஞரின் பெயர் ஷாருக்கான் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த இளைஞரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, டெல்லியில் இன்று பிற்பகலில் மீண்டும் வன்முறை வெடித்தது. 7 பேரை காவு வாங்கிய நேற்றைய கலவரத்தை தொடர்ந்து, ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின், பஜன்புரா சவுக் பகுதியில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே, கடும் மோதல் மூண்டது. கட்டைகள், கற்களால் ஒருவரை ஒருவர், விரட்டி, விரட்டி தாக்கிக் கொண்டதால், பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அப்பகுதியில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments