”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக் கும்பல்

0 55724

தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார் கும்பலின் முக்கிய தலைவன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் போல பேசுவதுதான் மோசடிக் கும்பலின் வழக்கம். குறைந்த வட்டியில் கடன் என்றோ, வங்கிக் கணக்குக்கு ரிவார்டு பாய்ண்டுகள் கிடைத்துள்ளதாகவோ, வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் முடக்கப்பட்டதாகக் கூறியோ இந்தக் கும்பல் ஏ.டி.எம். கார்டு விவரங்களை பெற்றது தெரியவந்துள்ளது.

ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண், நிறைவுத் தேதி, சிவிவி எனப்படும் பாதுகாப்புக் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பலரிடம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. கார்டு விவரங்களைக் கொண்டு கூகுள் பே, மோபிக் விக், பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளில் கணக்குகளை தொடங்கி இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த கும்பல் செல்போன் எண்களை மாற்றி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் அவர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும் அந்தக் கும்பல் அடிக்கடி மாற்றும் செல்போன் எண்களை தொழில் நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், அவர்கள் டெல்லியில் இருந்து மோசடியை அரங்கேற்றுவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்ட தமிழக தனிப்படை போலீசார், தீவிர கண்காணிப்பு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாகியுள்ள சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களிடமும் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவோரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கார்டுகளின் ரகசிய விவரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments