பிரதமர் மோடி - டிரம்ப் இடையே இன்று பேச்சுவார்த்தை : 300 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன...
அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இந்தியா அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்புடைய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அகமதாபாத், ஆக்ரா பயணம் முடித்து அதிபர் டிரம்ப் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட உள்ளது. பின்னர் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று டிரம்ப் மரியாதை செலுத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பேச்சு நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தமது பேச்சில் நேற்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படைக்கு 24 எம்ய ஹெச். 60 சீ ராக் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்த முக்கிய ஒப்பந்தம் இதில் அடங்கும். உலகிலேயே மிகச் சிறந்த ஆயுதங்களை தயாரிக்கும் நாடு அமெரிக்கா என்றும் அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கே அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இன்று இரவு 7.30 மணிக்கு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார். இதன் பின்னர் அதிபர் டிரம்ப் குடும்பத்தினருடன் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். டிரம்ப் தங்கியிருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments