பூனைக்குட்டி தம்பிகளுக்கு ஊர்கூடி பூஜை..! புல்லட் திருட்டு பாய்ஸ்
மதுரை மேலூர் அருகே வழக்கரிஞரின் புல்லட்டை திருடிச்சென்று வழிப்பறியில் ஈடுபட்ட திருட்டு பாய்ஸ் 3 பேரை பிடித்து ஊர் மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். போலீசாருக்கு டாட்டா காட்டியவர்கள் வாட்ஸ் அப் தகவலால் கச்சிதமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
மதுரை அனுப்பானடியை சேர்ந்த வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவரின் புல்லட்டை திருடிக்கொண்டு ஜெய்கிந்த் படத்தில் வரும் பூனைகுட்டி தம்பிகள் போல நள்ளிரவில் வலம் வந்து சிக்கிக் கொண்ட திருட்டு பாய்ஸ் இவர்கள் தான்..!
வழக்கரிஞர் காரல் மார்க்ஸ், நள்ளிரவில் வீட்டுக்குள் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் களவாடிச்சென்று விட்டதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் புல்லட்டை லவட்டிச்சென்ற திருட்டு பாய்ஸை தேடிவந்த நிலையில் புல்லட்டில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் போலீசாரிடம் சிக்காமல் டாடாகாட்டிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தப்பிச்செல்லும் வழியில் தனியமங்கலம் விலக்கில் இருசக்கர வாகனத்தில் சென்ற கலைச்செல்வன் என்பவரை கத்திமுனையில் மடக்கி அவரிடம் இருந்து 2ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். பார்ப்பதற்கு சுள்ளான்கள் போல இருந்தாலும் அவர்களது செயல்கள் எல்லாம் ஒரு பிறவி கிரிமினல்கள் போல இருந்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் வன்னாம்பாறை விலக்கு அருகே இந்த திருட்டு பூனை குட்டிகள் 3பேரும் பணத்தை பறிக்கொடுத்த கலை செல்வனின் கண்ணில் மீண்டும் தென்பட்டுள்ளனர்.
அவர் உஷாராகி மடக்க முயற்சிக்க அவரிடம் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். புல்லட்டின் வாகன பதிவெண்ணை குறித்துக் கொண்ட கலைச்செல்வன், வாட்ஸ் ஆப் மூலம் 2121 என்ற புல்லட் வண்டியில் வழிப்பறி கொள்ளையர்கள் ஊருக்குள் கத்தியுடன் சுற்றுவதாகவும் அவர்களை பிடிக்கும்படியும் குரல் பதிவு ஒன்றை பதிவிட்டார்.
இதனை பார்த்த மறைமலைபட்டி இளைஞர்கள் சிலர் திருட்டு புல்லட்டில் வந்த, புள்ளீங்கோக்களை மடக்கினர். அவர்கள் கையில் கிடைத்தால் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று அஞ்சி தப்பி ஓடிய திருட்டு பூனைகுட்டிகள் மூன்றையும் விரட்டிப்பிடித்த பொதுமக்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு சிறப்பு பூஜை செய்தனர்..!
வழக்கம் போல கிளைமேக்ஸில் வந்த காவல்துறையினர் சிறுவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்று ஊர்மக்களுக்கு புத்தி சொல்லி 3 திருட்டு பாய்சையும் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட கொடுவாளை கைப்பற்றிய காவல்துறையினர், புல்லட்டை மீட்டு எடுத்துச்சென்றனர்.
வதந்திகளுக்கு மட்டுமல்ல, சில நேரங்களில் வாட்ஸ் அப் இது போன்ற நல்லவிதமான தகவல் பறிமாற்றத்திற்கும் பயன்படுகின்றது. பயன்படுத்துகிறவர்களின் சுய அறிவை பொறுத்து இந்த செயல்கள் மாறுபடுகின்றது. தகவல் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் தகவல் தொடர்புக்கு மட்டுமல்ல குற்றங்களை எளிதில் தடுக்கவும், கண்டறியவும் முடியும் என்கின்றனர் காவல்துறையினர்.
Comments