தாஜ்மஹாலில் டிரம்ப் தம்பதி..!

0 3102

திரவன் மயங்கும் மாலையில், காதலின் சின்னமான தாஜ்மஹாலை மனைவி சகிதம் சுற்றிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் கலாச்சாரத்தை காலம் கடந்தும் பறைசாற்றும் அழகு பொக்கிஷமாக அது இருப்பதாக வியந்து பாராட்டி இருக்கிறார்.

அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான மார்க்கம் ஆக்ரா சென்றார் டிரம்ப். மாலை சுமார் நான்கரை மணி அளவில் ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு நடத்தப்பட்ட மயில் நடனம் கிராமீய கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் டிரம்ப் தம்பதி கண்டு களித்தனர்.

பின்னர் தாஜ்மஹாலுக்கு வந்த டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும், காலத்தால் அழியாத அந்த காதல் சின்னத்தை கைகோர்த்து நடந்தவாறு சென்று கண்டு ரசித்தனர்.

இந்தியாவின் செழிப்பான, பரந்து விரிந்த கலாச்சாரத்திற்கு தாஜ்மஹால் காலங்கடந்து நிற்கும் அடையாளமாக இருக்கிறது என பார்வையாளர் பதிவேட்டில் டிரம்ப் பதிவு செய்தார். தாஜ்மஹாலைக் கண்டு வியந்து நிற்பதாக அவர் புகழ்மாலை சூட்டினார்.

டிரம்பின் மகள் இவாங்கா, அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் (Ivanka Trump, Jared Kushner) ஆகியோரும் தாஜ்மஹாலின் அழகில் சொக்கி புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.

முன்னதாக விமானநிலையத்தில் இருந்து தாஜ்மஹால் செல்லும் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 25 ஆயிரம் பள்ளி மாணவர்களும், சுய உதவிக்குழு பெண்களும் திரண்டு இந்திய, அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறு டிரம்பிற்கு வரவேற்பு அளித்தனர்.தாஜ்மஹாலை ரசித்த பின்னர் ஆக்ராவில் இருந்து டிரம்ப் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments