130 கோடி இந்தியர்கள் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம் - பிரதமர்
இந்திய-அமெரிக்க உறவினை, நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கி வரும் புதிய இந்தியாவில், அமெரிக்காவிற்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராம் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானத்தில், "நமஸ்தே டிரம்ப்" என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார். விழாவில், டிரம்ப் மற்றும் குடும்பத்தினரை வரவேற்று பிரதமர் உரையாற்றினார். அப்போது, "மோடி, மோடி" என உற்சாக முழக்கம் விண்ணதிர ஒலித்தது...
நமஸ்தே டிரம்ப் என கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மொடேரா மைதானத்தில் தற்போது புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்றார். அமெரிக்காவின் ஹூஸ்டனில் "ஹவுடி மோடி" நிகழ்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா - அமெரிக்கா நட்புறவு பன்னெடுங்காலம் நீடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் டிரம்பை வரவேற்பதாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு சாதரணமான உறவு இல்லை என்றும், அது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றார்.
டிரம்ப் உரையை முடித்த பிறகு மீண்டும் தனது உரையை தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோரை குறிப்பிட்டு பேசிய டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இந்தியா - அமெரிக்கா இடையிலான நம்பகத்தன்மை அதிகமாகியுள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, 130 கோடி இந்தியர்கள் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகம், இராணுவக் கூட்டாளியாகவும் அமெரிக்கா திகழ்வதாக, பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்காவுடன் தகவல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்த பிரதமர், விளையாட்டுத்துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். புதிய இந்தியாவில் அமெரிக்காவிற்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவும், அமெரிக்காவும், இயற்கையான கூட்டாளிகள் என்றார். உற்சாக முழக்கங்களுடன், தனது உரையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
Comments