இந்தியா வந்தடைந்த டிரம்புக்கு உற்சாக வரவேற்பு...

0 4260

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.

முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். காலை 11.40 மணியளவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் சிறப்பு தனி விமானம் ஏர்போர்ஸ் -1, 11.37 மணிக்கே அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார். பாதுகாப்பு குழுவினர் இறங்கிய பின்னர், மனைவி மெலானியாவுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.

அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் நோக்கி அமெரிக்க அதிபர் காரில் பயணம் மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றனர். ஆங்காங்கே கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.

அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தில் கைத்தறி நூலால் ஆன மாலையை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சேர்ந்து அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.

இதையடுத்து சபர்மதி ஆசிரமத்தின் முன்பு மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். அதில் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இந்த அருமையான பயணத்துக்கு நன்றி என கூறி கையெழுத்திட்டிருந்தார்.

தொடர்ந்து தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே எனும் காந்தியின் கொள்கையை வலியுறுத்தும் குரங்கு பொம்மை குறித்து அமெரிக்க அதிபருக்கு, பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments