சேலத்தில் NIA அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை

0 1907

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 2 தீவிரவாதிகளும், பல்வேறு ஊர்களில் சிலரிடம் பேசி உள்ளதோடு, அவர்களுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூன்று குழுவாகப் பிரிந்து சேலம் வந்தனர். சேலம் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் சிலரிடம் விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையை முடித்து கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதிக்கும் சென்று அங்கும் சிலரிடம் விசாரணை செய்தனர்.

இரண்டாவது நாளாக இன்று காலை சேலம் டவுன் பகுதியில் முகமது புறா சந்து பகுதியில் வசிக்கும் அப்துல் ரஹ்மான் என்பவர் வீட்டில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் வீட்டில் 3 அதிகாரிகள் குழு இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை நடத்தியது.

பின்னர் அந்த வீட்டருகே உள்ள மொபைல் லேண்ட் என்ற செல்போன் கடையிலும் சோதனை செய்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

செல்போன் கடையில் இருந்து சிம் கார்டுகள் யார் யாருக்கு விற்கப்பட்டது என்ற பட்டியலை பெற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சோதனையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்க சேலம் டவுன் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில், செய்யது அலி நவாஸ் என்பவரின் 2ஆவது மனைவி வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் செல்போன், சிம் கார்டு மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை நடைபெற்ற வீட்டின் உரிமையாளரான செய்யது அலி நவாஸ், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னனி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நபர், எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான, தவுபிக் அலியின் நண்பர் என்ற அடிப்படையிலும் தவுபிக் அலி மற்றும் அப்துல் சமீம் ஆகிய இருவரும், இந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என்ற அடிப்படையிலும் சோதனை நடைபெற்றுள்ளது. எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், காவல்துறையினர் தவுபிக்கை மெய்தீன் பாத்தீமா வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர்: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, கொள்ளுமேடு, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் எனஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்ட காஜா மொய்தீன் என்பவரது 3வது மனைவி, லால்பேட்டை அருகே உள்ள கொள்ளுமேடு பகுதியில் வசித்து வரும் நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெய்வேலி இந்திரா காந்தி என்எல்சி குடியிருப்பில் வசித்து வரும், காஜா மொய்தீனின் மற்றொரு மனைவி வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள், டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் சோதனை நடத்தினர்.

இதில், 4 செல்போன்கள், லேப்டாப் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல்பட்டாம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் ஜாபர் அலி என்பவரது வீட்டில், என்ஐஏ ஆய்வாளர் அமினேஸ்வரி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், செல்போன் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை மதினா தெருவில் அப்துல் சமது என்பது வீட்டில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது. அங்கிருந்து செல்போன் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும், தமிழகத்தில் தாக்குதல் திட்டத்துடன் பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து சிம்கார்டு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், அன்பரசன், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், லியாகத் அலி, காயல்பட்டணம் அப்துல் ரகுமான் ஆகிய 5 பேரைக் தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். தற்போது என்ஐஏ விசாரணை நடைபெறும் நிலையில், ராஜேஷின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேடு சேமாத்தாம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், அன்பரசன், ராஜேஷ், லியாகத் அலி, அப்துல் ரஹ்மான் ஆகிய 5 பேரும் 200க்கும் மேற்பட்ட  சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச மென்பொருள் ஆகியவற்றைத் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

யார் யாருக்கெல்லாம் கடந்த காலங்களில் சிம் கார்டுகள் கொடுத்தனர், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த யார் யாருடனெல்லாம் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் போன்ற பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை முறைகேடான முறையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரியவந்தது.

பச்சையப்பன் வேலை செய்த செல்போன் கடைக்கு கடந்த மாதம் வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள், அங்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், கூடுதல் ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள அதிகாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள பச்சையப்பன் வீட்டிக்கு வந்த அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இதனிடையே, எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தக்கலை காவல் நிலைய வளாகத்தில் என்.ஐ.ஏ அலுவலகம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தக்கலை காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கான தற்காலிக விசாரணை அலுவலகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments