சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை..!

0 2334

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ள நிலையில், சீனாவில் மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் தொடங்கி உலகம் முழுவதும் நச்சுக்கரங்களைப் பரப்பியுள்ள கொலைகார நோயான கொரோனாவுக்கு இதுவரை 2 ஆயிரத்து 471 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 930 ஆக உள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 11 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரானாவை இரட்டிப்பு வேகத்தில் தடுத்து கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சீன அதிபர், ஜி ஜின்பிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் வேகமாக பரவும் கொரானாவை தடுப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு வெளியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து வழிபாட்டுத் தலங்களைத் தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாகச் சேருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் தென் கொரியா தனது தேசிய அச்சுறுத்தல் அளவை “ரெட் அலர்ட்” ஆக உயர்த்தியது.

கொரோனா வேகமாகப் பரவும் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கடந்த ஒருவாரத்தில் 132 பேர் இந்த நோயால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் மரணித்துள்ள நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் உச்சகட்ட எச்சரிக்கையில் இருக்குமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானில் வேகமாக கொரோனா பரவி வருவதால் இந்நாட்டுக்கு இடையிலான எல்லையை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மூடியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments