பாகிஸ்தான் தயாரிப்பு 14 தோட்டாக்கள் சிக்கின

0 1333

கேரள மாநிலம் கொல்லம் அருகே, தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தானில் தயாரான 14 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் பதுக்கியதாக இருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழா என்ற இடம் உள்ளது. இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். அங்குள்ள பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலை ஓரத்தில் ஒரு மூடிய கவரில் மர்ம பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அதனை கைப்பற்றியபோது அதில் 14 தோட்டாக்கள் இருந்தன. மேலும் தீவிரவாத தடுப்பு படை போலீசார் ஆய்வு செய்ததில் அவை நீண்ட தூரம் குறிபார்த்து சுடும் தொலைநோக்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய 7.62 எம்எம் ரக தோட்டாக்கள் என்றும், அதில் POF  என குறியிடப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் ராணுவ தொழிற்சாலையில் தயாரானவை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பயங்கரவாதிகள் இந்த தோட்டாக்களை பதுக்கிவைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தயாரிப்பு தோட்டாக்கள் இங்கு வந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. சமீபத்தில் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் தயாரிப்பு தோட்டக்கள் சிக்கியதையடுத்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே எஸ் ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஒப்படைத்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தி, துப்பாக்கியும் ஒப்படைக்கப்பட்டது.  இதையடுத்து தக்கலையில் விசாரணை அலுவலகம் திறக்கவும், பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments