இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..! சீமான் அறிவிப்பு
கோவையில் நடந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம்தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளரான சீமான், தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாங்கள் அனைவரும் இந்தியர்கள், எங்களை மத ரீதியாக பிரித்து பார்க்காதீர்கள் என்ற உரிமைகுரலோடு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கோவையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னிடம் குடியுரிமை சான்று கேட்டால் தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவிக்க முடிவெடுத்து விட்டதாகவும், இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
குடியுரிமை சான்று கேட்க வரும் அதிகாரியை 50 பேர் சேர்ந்து மடக்கி, முதலில் அவரது குடியுரிமை சான்றை காட்டச்சொல்வோம் என்று சீமான் தெரிவித்தார்.
காஷ்மீர் தனி நாடு என்றும் அதனை யூனியன் பிரதேசமாகவும், ஒன்றிய பிரதேசமாகவும் மாற்றியது கொடுமை என முழங்கினார் சீமான்.
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த சீமான், தீர்ப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்சின் அறிக்கையும், திமுகவின் அறிக்கையும் ஒன்று என்றும் காங்கிரஸ் தலைவர் ரத்த ஆறு ஓடும் என்று அச்சமூட்டியதாகவும் தெரிவித்தார்.
தான் எவ்வளவு தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினாலும் அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் சீமான் வேதனை தெரிவித்தார்.
Comments