நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 லட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். நாளை காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வரும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு விமான நிலையத்தில் சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிரம்மநாதம் என்று அழைக்கப்படும் இந்த ஒலி பிரபஞ்சத்தில் காணப்படும் அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களையும் நேர்மறை எண்ணங்களையும் உள்ளிளுக்கும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து 150 அடி நீள சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் டிரம்ப் தம்பதியை வரவேற்க நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
பின்னர் அங்கிருந்து புறப்படும் டிரம்ப் குழுவினருக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மொதிரா மைதானம் வரை லட்சகணக்கானோர் வழிநெடுக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதேபோல் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி, அகமதாபாத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டும், ஏற்கெனவே இருக்கும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன.
முக்கிய பகுதிகளில் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு, சுவர்களில் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது. மொதிரா மைதானமும் அழகுபடுத்தப்பட்டு அங்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் அரை மணிநேரம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்தாகலாம் என்ற தகவல்கள் பரவின. இந்நிலையில் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் விஜயம் செய்வார் என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து டிரம்ப்பும் வர இருப்பதாக ரூபானி தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் டிரம்ப் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட வரும் டிரம்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை குழுவில் 5 லாங்கூர் இன குரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலை தனது மனைவியுடன் சேர்ந்து டிரம்ப் நாளை சுற்றி பார்க்கவுள்ளார்.
இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதால், டிரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்னை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அணிவகுப்பு வாகனம் செல்லும்போது குரங்குகள் வந்தால், அதை விரட்டியடிக்கவும், அச்சுறுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
Comments