கொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா ? வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்

0 3309

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் பொன்னேரியில் கொரானா வைரஸ் தாக்கி கோழிகள் செத்து விழுவதாக வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வதந்தியால், கோழிக்கறி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. உடன் பிறப்புகளால் கோழி வியாபாரிகளுக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் பகுதி திமுக வாட்ஸ் அப் குழுவில் உள்ள தீபன் என்பவர் தான், கோழிக்கு கொரானா..! என்ற தகவலை வாட்ஸ் அப்பில் பரப்பி கோழி வியாபாரிகளை கலங்க வைத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான உடன் பிறப்பு..!

அந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளையும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் அதிவேகமாக பகிர்வதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் குழுவில் வந்த கொரானா எச்சரிக்கை அறிவிப்பு , கோழிக்கறி வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது

அதில் கும்மிடிப்பூண்டி பிராய்லர் கோழிகடைகளில் உள்ள அனைத்து கோழிகளையும் கொரானா தாக்கியதாகவும், இது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அறிவுப்பூர்வமாக குறிப்பிடபட்டிருந்தது.

அத்தோடு விடவில்லை கும்மிடிபூண்டி, பொன்னேரி பிராய்லர் கோழிக்கடைகளில் அனைத்து கோழிகளையும் கொரானா தாக்கியதாகவும் இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும் வேண்டு கோள் விடுக்கப்படிருந்தது.

மக்களின் உடல் நலனில் அக்கறை உள்ள நாட்டு மருத்துவர் போல அனைத்திற்கும் உச்ச கட்டமாக, தயவு செய்து யாரும் கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டு ஒட்டு மொத்த கோழிக்கறி கடைகளையும், பூட்டே இல்லாமல் வாட்ஸ் அப் தகவலால் பூட்டி விட்டனர்..!

இதையடுத்து பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களுக்கு இந்த தகவல் அதிவேகமாக பரவ, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கறிகடைகளில் கோழிஇறைச்சி விற்பனை முற்றிலும் சரிந்தது.

ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த கோழி கறியின் விலை ஒரு சில தினங்களில் 80 ரூபாயாக குறைந்தது. விலை குறைந்தாலும் கடைக்கு யாரும் வராததால் கோழிக்கறி கடைகள் காற்று வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கோழியை உறிச்சி வாங்கினாலும், உசுரோடு வாங்கினாலும் 80 ரூபாய்க்கு தருவதாக எழுதிபோட்டும் கறிவாங்க ஆளில்லை என்பது தான் சோகம்..!

இந்த தகவலை பரப்பிய உடன்பிறப்போ, தனக்கு வாட்ஸ் அப்பில் வந்த தகவலை உண்மை என்று நம்பி , குழுவில் பகிர்ந்ததாக விளக்கம் அளித்தார்.

உடன்பிறப்பு சொன்னபடி உண்மையிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் பிராய்லர் கோழிகளை கொரானா வைரஸ் தாக்கியதா ? என்ற கேள்வியுடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பபட்டது.

இது குறித்து தனக்கு தகவல் ஏதும் வரவில்லை என்றும் வெள்ளிக்கிழமை நடந்த கால் நடை மருத்துவத்துறைக்கான ஆலோசனை கூட்டத்தில் கூட கொரானாவால் கோழிகளுக்கு பாதிப்பு என எந்த ஒரு அதிகாரியும் தன்னிடம் தெரிவிக்கவில்லை, இந்த வாட்ஸ் அப் தகவல் வெறும் வதந்தி என்றும் அதனை பரப்புபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

தற்போது சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலும் கோழிகள் கொரானா தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாகவும் இதனை மகுடஞ்சாவடி மருத்துவமனை உறுதிபடுத்தியதாகவும் கூறி வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பபட்டு வருகின்றது.

தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி கோழி வியாபாரத்துக்கு ஆப்பு வைத்ததோடு, கடையில் நானும் கோழியும் தான் இருக்கோம்... வியாபாரம் இல்லை..! என்று சொல்லவைத்த சமூக விரோதிகளை, வியாபாரிகள் காட்டத்துடன் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments