உட்கார்ந்தே இருந்தால் இவ்வளவு பாதிப்பா..!

0 2259

இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டதால் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றான், இதன் விளைவாக மக்கள் உட்கார்ந்தே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். வீட்டிலும், பணியிலும், பயணத்திலும் என நம்முடைய அன்றாட வாழ்க்கை அதிகமாக உட்கார்ந்து கொண்டே எல்லா வேலைகளையும் செய்யும் படி மாறிவிட்டது.

காலையில் எழுந்தவுடன் உணவை உட்கார்ந்து சாப்பிடுவதில் தொடங்கி, வேலைக்கு செல்லவும் காரில் அல்லது பைக்கில் உட்கார்ந்து பயணிக்கிறோம், நாள் முழுவதும் அலுவலகத்திலும் உட்கார்ந்து வேலை செய்கிறோம், பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போதும் வாகனத்தில் உட்கார்ந்து செல்கிறோம்

பின்னர் தொலைக்காட்சியைப் பார்க்க அல்லது இணையத்தில் உலாவ என நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் உட்கார்ந்தே செய்யும் சூழல் உருவாகிவிட்டதாலும், நேரம் இல்லை என்ற காரணத்தினாலும் உடற்பயிற்சி அல்லது குறைந்தபட்ச நடைபயிற்சி செய்ய கூட இன்றைய காலகட்டத்தில் யாரும் முயற்சிப்பதில்லை.

image

பாதிப்புகள் என்ன :

அந்த வகையில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதும் அல்லது தொடர்ந்து 9 மணிநேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்து கொண்டே இருப்பதும் மனிதனுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அதிகநேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதினால் முதலில் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் தாக்கும், பின்னர் உடல் பருமன் மற்றும் அதிக இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை, இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு வளருதல் மற்றும் உடலில் அசாதாரணமாக கொழுப்பின் அளவு அதிகரித்தல் போன்ற நோய்களை அதிகரிக்கும்.

உட்கார்ந்திருப்பது மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது புற்றுநோய் தாக்கக்கூடிய அறிகுறிகளையும் அதிகரிக்கும் எனவும் வெரிகோஸ் எனும் நரம்பு பாதிப்பு,முதுகு தண்டு வலி போன்ற பாதிப்புகளை உருவாக்கும் எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல புகைபிடிப்பதால் அல்லது இதய நோய்களால் இறப்பவர்களை விட நீண்டநேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பது எப்படி:

பொதுவாக இதனால் ஏற்படும் பாதிப்புகளை நம்முடைய வாழ்க்கை முறைய மாற்றுவதன் மூலமே தடுக்க முடியும். அதிகாலை எழுந்து குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி அல்லது மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

image

நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், குறிப்பாக கீரை வகைகள், பழங்கள், சிறுதானியங்களை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பு, அதிக சர்க்கரை அளவு போன்ற நோய்களை தடுக்கலாம். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கும் பணியை செய்பவராக இருந்தால் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்களாவது எழுந்து நிற்ப்பது, முடிந்தால் நடப்பதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.

நாம் நம்முடைய வேலைகளை பாரம்பரிய முறையில் தினமும் செய்யாததன் விளைவே இது போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாக அமைகின்றது. எனவே நம்முடைய அன்றாட வேலைகளை முடிந்த அளவு நாமே செய்து இது போன்ற பாதிப்புகளிலிருந்து மீள்வோம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments