இன்றளவும் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க இது தான் காரணம்.!
பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம் காலம் காலமாக இந்த பூமியில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாம்.
மனித இனத்தின் மூதாதையர்கள் புதுப்புது சூழல்களை எதிர்கொண்ட போது, அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகே கிடைத்த உணவுகளை சாப்பிடவும், புது வகை உணவுகளின் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு ஏற்பவும் சில பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கின்றன.
குடலில் அதிகம்:
இந்த பாக்டீரியாக்கள் தான் நம் மூதாதயர்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ வைத்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குடலுக்குள் ஒரு நுண்ணுயிர் உலகமே உள்ளது. மனிதர்களின் உடலுக்குள் எண்ணிக்கையில் அடங்காத அளவிலான நுண்ணுயிரிகள் உள்ளன. இதில் நம் குடலில் தான் அதிக அளவு நுண்ணுயிரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில வகை பாக்டீரியாக்கள் குடலில் அமிலத் தன்மையைச் சமச்சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன.
நன்மை, தீமை:
நுண்ணுயிரிகள் நன்மை மற்றும் தீமை என இரு செயல்களும் செய்கின்றன. இயல்பாகவே நமது குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நன்மை செய்பவையாக உள்ளன. நல்ல ஆரோக்கியமிக்க குடல் மண்டலம், நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.
நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை குடலில் செரிமானம் அடையச் செய்ய உதவுகிறது பைபிடோ என்ற பாக்டீரியா. உணவுகளில் உள்ள சத்துக்கள், செல்களில் ஆற்றலாக மாற இந்த பாக்டீரியா குறிப்பிட்ட அளவில் நம் குடலில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். அது போல இரைப்பை புண்ணை உண்டாக்கும் "ஹேலிக்கோபாக்டர் பைலோரி" என்ற தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது " லேக்டோபேஸில்லஸ்" என்ற நன்மை செய்யும் பாக்டீரியா.
மன அழுத்தத்தை குறைக்கும்.!
நம்முடன் நன்மை தரும் நுண்ணுயிரிகள் இணைந்து வாழ்ந்தால் தான், ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். குடலில் உள்ள செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும் பாக்டீரியாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ரசாயன மற்றும் நச்சுத்தன்மை குறைகிறது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் குடலில் உள்ள நுண்ணுயிர்கள், நல்ல மன நிலை உள்ளவரது குடல் நுண்ணுயிரிலிருந்து வேறுபட்டு இருப்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குடலில் உள்ள நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் மனஅழுத்தம் மற்றும் பதற்ற நிலையை கூட தடுக்க உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நோய் தொற்றுக்காக அடிக்கடி ஆண்டிபையாட்டிக் மருந்துகளை எடுத்து கொள்வதால் நுண்ணுயிரிகள் அழிந்து போகின்றன . கெட்ட பாக்டீரியாக்களோடு நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களும் அழிகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Comments