அதிபர் டிரம்ப் வருகை... பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை மறுநாள் (24ம் தேதி ) குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை தரவிருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளால் அந்நகரமே ஜொலிக்கிறது.
இந்தியாவில் வரும் 24ம் தேதியும், 25ம் தேதியும் தனது மனைவி மெலனியாவுடன் சுற்றுப்பயணம் செய்யும் டிரம்ப், இந்த பயணத்தின் முதல்கட்டமாக அகமதாபாத்துக்கு வருகை தரவுள்ளார். பின்னர் அகமதாபாத்திலுள்ள மொதிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த பயணத்தின்போது டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஸ்நர் (Jared kushner ) மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் (Robert O'Brien) , வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ் (Wilbur Ross ) உள்ளிட்டோர் கொண்ட 12 பேர் குழுவும் வரவுள்ளது. டிரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மொதிரா மைதானம் வரை லட்சகணக்கானோரும் வழிநெடுக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதேபோல் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையொட்டி, அகமதாபாத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டும், ஏற்கெனவே இருக்கும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. முக்கிய பகுதிகளில் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு, சுவர்களில் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது. மொதிரா மைதானமும் அழகுபடுத்தப்பட்டு அங்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் டிரம்ப் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆக்ராவை அடுத்து டெல்லிக்கு செல்லும் டிரம்ப், அங்கு பிரதமர் மோடியுடன் 25ம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா, அமெரிக்கா இடையே ஆயுத தளவாட கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, குடியுரிமை திருத்த சட்ட விவகாரம், காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப் பேசுவார் என அமெரிக்க அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா ஆகியோர் டெல்லி வரும்போது அவர்களது சொந்த பயன்பாட்டுக்காக தங்கம் மற்றும் வெள்ளி மூலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, அவரின் பயன்பாட்டுக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த அருண் பாபுவாலுக்கு சொந்தமான நிறுவனம் பிரத்தியேக பாத்திரங்களை தயாரித்துக் கொடுத்தது. தற்போது அதே நிறுவனம், டிரம்ப் மற்றும் மெலனியாவின் சொந்த பயன்பாட்டுக்கும் பிரத்யேகமாக பாத்திரங்களை தயாரித்து கொடுத்துள்ளது.
Comments