தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக ஆவணங்களை கேட்கக் கூடாது... முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிக்கை

0 1597

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் தந்தை, தாய் மற்றும் துணைவருக்கான ஆவணங்களைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ மற்றும் சகோதரத்துவ கொள்கைகளைத் தமிழகத்தில் நிலைநாட்ட அதிமுகவும், மாநில அரசும் எப்போதும் உறுதியாகப் பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் அதிமுக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடானது 2010-ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள அவர்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் ஆறு மாதங்களோ அல்லது அதற்கு மேலாக வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாய்மொழி, தந்தை, தாயார்-துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள் எதிர்வரும் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments