தூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..! கொலைவெறி நடத்துனர்

0 2059

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பேருந்தின் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து பயணிப்பதை வாடிக்கையாக்கிய திருமணமான பெண்ணை காதல் கீதத்தால் மயக்கிய நடத்துனர் ஒருவர், தனது வேலை பறி போனதால் பழகுவதை நிறுத்திய அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த திருமணமான பெண் சலோமி. 21 வயதான இவர் வடலூரில் உள்ள கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.

வெள்ளிக்கிழமை கடையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர் சலோமியின் மீது பெட்ரோலை ஊற்றி ஊயிரோடு தீவைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

தீவைத்துவிட்டு தப்ப முயன்ற அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், அந்த பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி என்பதும் ஒரு தலை காதலால் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

சலோமி தினமும் நெய்வேலியில் இருந்து வடலூருக்கு வடிவேல் என்ற தனியார் பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
பேருந்தின் முன்பக்கம் ஏறியதும் ஓட்டுனர் இருக்கையை சுற்றி உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்வார் என்று கூறப்படுகின்றது.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பேருந்தின் நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர், பேருந்தில் , காதல் பாடல்களை ஒளிபரப்பி பேச்சுக் கொடுத்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் தூதுவளை இலையை அரைக்காமல், தொண்டையில் நனைக்காமல் மணிகணக்கில் பேசும் அளவுக்கு நீண்டுள்ளது. நடத்துனர் தனது சுந்தர பேச்சில் மயக்கி சலோமியை காதல் வலையில் வீழ்த்த முயற்சிக்க அவரோ நட்பாக மட்டுமே பேசி வந்ததாக கூறப்படுகின்றது.

சுந்தரமூர்த்தி, சலோமியிடம் மட்டும் அல்லாமல் பேருந்தில் பயணித்த வேறு சில பெண்களிடமும் காதல் கீதம் பாடிய விபரம் தனியார் பேருந்து நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், நடத்துனர் சுந்தர மூர்த்தியை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 8 மாதமாக வேறு வேலை கிடைக்காமல் பேருந்து நிலையத்தையே இலவு காத்த கிளியாக வலம் வந்த பணியிழந்த நடத்துனர் சுந்தர மூர்த்தியிடம் பேசுவதை சலோமி முற்றிலும் நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் சலோமியை விரட்டி சென்று மிரட்டி காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளான் சுந்தரமூர்த்தி. ஆனால் அந்த பெண் தான் திருமணமானவள் என்பதை எடுத்து கூறி அண்ணன் என்ற முறையில் பழகினேன் என்று எடுத்து கூற மனம் உடைந்த சுந்தரமூர்த்தி சலோமியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி சம்பவத்தன்று பெட்ரோலுடன் அவர் வேலைபார்க்கும் கடைக்கு சென்று, அங்கிருந்த சலோமி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேருந்தில் பயணிக்கும் பெண்கள், ஓட்டுனரிடம் அடிக்கடி பேச்சுக்கொடுத்தால் ஒட்டு மொத்த பயணிகளின் உயிருக்கும் ஆபத்து..! அதே நேரத்தில் நடத்துனர் மற்றும் செக்கரிடம் பேச்சுக்கொடுப்பதை வாடிக்கையாக்கினால் அது பேருந்து ஓனரின் முதலுக்கு மட்டும் அல்ல பேச்சுக் கொடுக்கும் பெண்களின் உயிருக்கும் ஆபத்து என்பதை சற்று அழுத்தமாகவே சுட்டிக்காட்டுகின்றது இந்த தீவைப்பு சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments