என்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன ?

0 2873

என்.பி.ஆர் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான கையேட்டில் இடம் பெற்றுள்ள விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்கவும் ஏதுவாக உள் விதிகள் உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடு செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவிருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக பல்வேறு குழப்பங்களும், வதந்திகளும் பரப்பபட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள கையேடு பல்வேறு கேள்விகளுக்கான விளக்கமாக அமைந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் 14 கேள்விகள் கேட்கப்படும்.

குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, பெயர்கள் மற்றும் பாலின விவரங்கள் குறித்து முதல் மூன்று கேள்விகள் கேட்கப்படும்.

4-வதாக குடும்ப உறுப்பினர்களில் திருமணம் ஆனவர் விபரம், துணையை இழந்தவரா, விவாகரத்தானவரா என்பன உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.

5-வதாக குடும்பத் தலைவரின் பிறந்த தேதி கேட்கப்படும் அதில் ஆதார், பாஸ்போர்ட், பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லையெனில் பிறந்த போது எழுதிய ஜாதக அடிப்படையில் வாய் மொழியாக தெரிவித்தால் போதும். சான்றிதழ் கட்டாயம் இல்லை.

பிறந்த தேதி மறந்து போன நபராக இருந்தால், நம் நாட்டில் கொண்டாடப்படும் எந்த பண்டிகைக் காலகட்டங்களில் பிறந்தார் என்பதை சுட்டிக்காட்டலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியப் பண்டிகைகளான மிலாடி நபி, ரம்ஜான், பக்ரீத் இடம்பெறவில்லை என்பதால் மத ரீதியாக தங்களை மட்டும் பிரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு வேளை பிறந்த ஆண்டே தெரியவில்லை என்றால் சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டு எந்தக் காலகட்டத்தில் பிறந்தார் என்பதை தெரிவிக்கலாம்.

6-வதாக எந்த ஊரில் பிறந்தோம் என்பதை தெரிவிக்க வேண்டும். அதன்படி இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் வெளிநாட்டில் பிறந்திருந்தால் அதனைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று சொந்த மாநிலம் வேறாகவும், வசிக்கும் மாநிலம் வேறாகவும் இருந்தால் அந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். மேலும் வெளிநாட்டினராக இருந்து இந்தியாவில் வசித்தால் அந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

7-வதாக வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு, அந்த நாட்டு குடியுரிமை பெற்று, இந்தியாவில் வசித்தால் அவரது பாஸ்போர்ட் விவரத்தை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபரின் கல்வித் தகுதிகள், தொழில் விவரங்கள் கேட்கப்படுகின்றன.

10-வதாக தாய்மொழி விவரங்கள் கேட்கப்படுகின்றன. பேச்சு மற்றும் காது கேட்கும் குறைபாடு உள்ளவராக இருந்தால் அவர் பயன்படுத்தும் சைகை மொழி குறித்த விவரங்களை கூட தெரிவிக்க வேண்டும். அவர் எந்த மொழியில் எழுதுகிறார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

11-வதாக நிரந்தர முகவரி கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சொந்த ஊர், பூர்வீக முகவரி உள்ளிட்டவை கேட்கப்படுகின்றன.

12-வதாக சொந்த மற்றும் தொழில் காரணங்களால் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவராக இருந்தால், அவர் கடைசியாக வசித்த இடம், அங்கு கடைசியாக வசித்த காலம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன.

13-வதாக தாய், தந்தை, மனைவி ஆகியோர் பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவை கேட்கப்படுகின்றன. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டாலும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. அவர்களின் அடையாள அட்டைகள் இருந்தால் காண்பிக்கலாம், இல்லாவிட்டால் தேவையில்லை.

14-வதாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் ஆகியவற்றின் எண்கள் மற்றும் கைபேசி எண்ணையும் வாய்மொழியாக தெரிவிக்கலாம். ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆவணங்கள் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டலும், இன்னும் செயல்பாட்டுக்கே வராத, என்.ஆர்.சி என்றழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒரு வேளை செயல்பாட்டுக்கு வந்தால் என்.பி.ஆரில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற தகவலை பரப்பியே தற்போது போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் தான் தாய்மொழி, தந்தை, தாய், மனைவி பிறந்த இடம், தேதி , ஆதார், கைபேசி எண்கள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் எண்கள் உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுப்பில் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments