புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு

0 1709

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சம் ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதேபோல மஞ்சள் அட்டைதாரகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு நிலுவையில் இருந்த 6 மாத அரிசிக்கான தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

சிவப்பு அட்டைதாரர்களுக்கு மாதம் 600 ரூபாய் வீதம், 3 ஆயிரத்து 600 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதம் 300 ரூபாய் வீதம், ஆயிரத்து 800 ரூபாயும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதேசமயம், இந்த முறையை எதிர்த்தும், பயனாளிகளுக்கு மாதந்தோறும் அரிசியாகவே வழங்க உத்தரவிடக் கோரியும் முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதலமைச்சர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு, புதுச்சேரியில் ரேசன் அரிசி விநியோகிக்கப்படவில்லை. தற்போது தீர்ப்பு வந்திருப்பதால், நிலுவையில் உள்ள காலகட்டத்திற்கும் சேர்த்து, சிவப்பு ரேசன் அட்டைகளுக்கு மாதத்திற்கு தலா 600 ரூபாய் வீதமும், மஞ்சள் ரேசன் அட்டைகளுக்கு மாதத்திற்கு தலா 300 ரூபாய் வீதமும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேசன் அரிசிக்கு பதிலாக பணமாக வழங்கும் முறையால், ரேசன் அரிசி கடத்தல், கமிஷன் போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு பயனாளிகளுக்கு நேரடியாக பயன்கள் சென்று சேரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments