குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து ஏவுகணை பாகம் பறிமுதல்

0 1118

குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் (ballistic missile) ஆட்டோகிளேவ் (Autoglave) எனும் முக்கிய பாகத்தை டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கடந்த மாதம் 17ம் தேதி டா குயில் யுன் (Da cui yun) கப்பல் புறப்பட்டது. கராச்சி செல்லும் வழியில் குஜராத்தில் கான்ட்லா துறைமுகத்துக்கு கடந்த 3ம் தேதி வந்த அக்கப்பலுக்கு 4ம் தேதி புறப்பட அதிகாரிகள் அனுமதித்தனர்.

இந்நிலையில், கப்பலில் தொழிற்சாலைகள், ஏவுகணைகளுக்கு பயன்படும் Autoglave எனப்படும் இரட்டை உபயோக உயர் அழுத்த அனற்கலன் இருப்பதாகவும், ஆனால் கப்பலில் இருப்போர் அதை மறைத்து, தொழிற்சாலை அனற்கலன் மட்டும் இருப்பதாக தெரிவித்து அனுமதி பெற்றதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கான்ட்லா துறைமுகத்தில் இருந்து வெளியேற சீனக் கப்பலுக்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் டிஆர்டிஓ அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இரட்டை உயர் அழுத்த அனற்கலன் கப்பலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கராச்சிக்கு செல்ல அக்கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

டிஆர்டிஓ அதிகாரிகளால் இன்று அந்த அனல்கலன் திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது. இந்த சோதனையில் விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், அந்த சாதனத்தை இறக்குமதி செய்த இஸ்லாமாபாத்தை சேர்ந்த யூனைடெட் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், அதை அனுப்பி வைத்த ஹாங்காங்கின் ஜெனரல் டெக்னாலஜி நிறுவனம் மீது 2005ம் ஆண்டு இந்திய ஆயுத பரவல் தடை சட்டத்தின்கீழும், ஐ.நா. சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments