பொருளாதார மற்றும் முதலீடு கருத்தரங்கை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அமைதி மிக்கதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற ஆற்றல்மிகு மனிதவளம் உள்ளதாலும் முதலீடுகள் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் தொழில் தொடங்கவும் முதலீடு செய்யவும் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய முதலமைச்சர், பன்னெடுங்காலமாக கடல் வாணிபத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், தமிழகத்தின் உற்பத்திப் பொருட்கள் பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான யாதும் ஊரே திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்தரங்கில், சென்னை-பெங்களூர் இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தை பொன்னேரி வரை அமைப்பதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசுக்கும் மத்திய அரசின் NICDIT நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சி திட்டமாக திருவள்ளூரில் 217 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா திட்ட பணிகளையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது ஜோகோ ஹெல்த் நிறுவனத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பை உயர்த்தி 250 கோடி ரூபாய் முதலீடு செய்து தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதேபோல, கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபா சிகால் நிறுவனம் 504 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 330 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
Comments