சாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..! சீரமைக்கப்படுமா..?
தென்சென்னையின் நிலத்தடி நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரி, பராமரிப்பின்றி மாசடைந்து, சாக்கடைக் கால்வாய்கள் சங்கமிக்கும் இடமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காணப்படும் இந்த ஏரி, புறநகர்ப் பகுதியிலோ அல்லது ஏதேனும் கிராமத்திலோ உள்ளது என்று நினைக்க வேண்டாம். சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் வேளச்சேரியில் உள்ளது. இந்த பகுதிக்கு வேளச்சேரி என பெயர் வரக் காரணமும் இந்த ஏரி தான்..
200 ஏக்கர் பரப்பளவிற்கு குறையாமல் பரந்த நீர்நிலையாக இருந்த வேளச்சேரி ஏரி முன்பொரு காலத்தில் தென்சென்னையின் முக்கிய நீராதாரமாக இருந்துள்ளது, ஆனால் நகர விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக கான்கிரீட் கட்டிடங்கள், வீடுகள் என பெருகிய பின் தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு சுருங்கியுள்ளது..
அதிலும், கரைகள் வலுவிழந்து, கோரைப் புற்களாலும், ஆகாயத் தாமரைகளாலும் நிரம்பி ஏரியின் பல பகுதிகள் புதர் போலக் காட்சியளிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து கழிவுநீரை திறந்துவிடவும் குப்பைகளை கொட்டும் கிடங்குபோல் வேளச்சேரி ஏரி பயன்படுத்தப்படுகிறது. அதுவும், கரையின் ஒரு ஓரத்தில், கழிவுநீர் வாய்க்கால் நேரடியாக வந்து ஏரியில் கலப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஏரியின் கரையின் ஒருபுறத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நீண்ட நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பெண்களும் குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை உள்ளதாகவும், இரவில் மதுக்கூடமாக இந்த நடைபாதை பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த ஏரியில் உள்ள மீன்வளம் குறித்து பலருக்கு தெரியவில்லை எனக்கூறும் ஐயனார் என்பவர், விறால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி போன்ற பலவகை மீன்களை தினந்தோறும் பிடித்துச் சென்று விற்பனை செய்வதாக கூறுகிறார்.
ஏரியை புனரமைக்க வேண்டும் என பல முறை மனு அளித்தும் பயனளிக்கவில்லை எனக்கூறும் வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர், இதற்காக தமிழக அரசு 25 கோடி நிதி ஒதுக்கிய பின்னரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியின் ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டு வருவதாகவும் அதன்பின்னரே ஏரியை தூய்மைப்படுத்துதல் கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல், போன்ற பணிகள் துவங்கப்படும் என்கின்றனர்.
குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீர் கலத்தல் போன்ற பல சீர்கேடுகள் நடக்கும் போதிலும் , இயற்கைத் தன்மையையும் நிலத்தடி நீர் வளத்தையும் இறுக்கிப்பிடித்து பிழைத்துக்கொண்டிருக்கிறது வேளச்சேரி ஏரி. இயற்கையின் கொடையான இத்தகைய ஏரியை விரைந்து புனரமைத்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்...
Comments