மதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்

0 1762

என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கு மதம் குறித்து எந்த தகவலும் கேட்கப்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், 2010ல் என்பிஆர் நடத்தப்பட்ட போது கேட்கப்பட்ட 14 கேள்விகளை விட, கூடுதலாக தாய்மொழி, தந்தை, தாய், துணைவியார், கைப்பேசி எண், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், பிறந்த இடம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவதாகவும், அதில் கேட்கப்பட உள்ள விவரங்களுக்கு எவ்வித ஆவணங்களும் சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறினார்.

மதம் குறித்த எந்த தகவலும் பெறப்படுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நாட்கள் எவை என்பன உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுவரை பதில் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

என்.பி.ஆர். கணக்கெடுப்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் துவங்கப்பட்டது எனவும், இந்த கணக்கெடுப்பால் சிறுபான்மையின மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் பிறந்த அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக அரசு இருக்கும் என அவர் உறுதியளித்தார். என்.பி.ஆர். கணக்கெடுப்பு குறித்து வதந்திகளை கிளப்புபவர்கள் நீண்ட நெடிய காலமாக பொது வாழ்வில் இருப்பவர்கள் எனவும், அந்த நம்பிக்கையை அடிப்படை ஆதாரமாக வைத்து, வாக்கு வங்கிக்காக இது போன்ற விஷமத்தனமான விதைகளை பரப்புவதாகவும், மக்களை திசைத்திருப்பும் இதுபோன்ற பிரச்சாரங்கள் தமிழகத்தில் எடுபடாது எனவும் அமைச்சர் தெவித்தார்.

என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அரசு அறிவிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் நிதிநிலை அறிக்கை மீதான ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments