8,888 பேரை தேர்வு செய்வதற்கான சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவு
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறுவது கேலிக்கூத்தாக இருப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு அண்மையில் தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் சிகரம் என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்றோரின் கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வெளியிடப்படவில்லை என்றும், சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில காவலர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ் பாபு, தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர் தேர்விலும் முறைகேடுகள் நடப்பது கேலிக்கூத்து என்றும் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள்? என்றும், அனைவரும் எப்படி 69.5 என ஒரே மதிப்பெண்கள் பெற்றார்கள் ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இருவர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள்? என்றும், இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம் என்ற நீதிபதி, கிராமப் புற மக்கள் அரசு வேலையை பெரிதாக நினைப்பதாகவும் முறைகேடு போன்ற விரும்பாதகாத நிகழ்வுகளால் அவர்கள் எண்ணம் மாறும் என்றும் நீதிபதி கூறினார். தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ விசாரணை குறித்து மார்ச் 5-ஆம் தேதிக்குள் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார்.
Comments