காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது

0 2048

காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது.

காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மசோதாவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்கள் அதிகம் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள் என்பதோடு, அவை பாதிப்பில்லாத மாவட்டங்கள் என்ற காரணத்தால் இணைக்கவில்லை என தெரிவித்தார். 

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப அரசு மறுத்துவிட்டதால், அதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுகவின் வெளிநடப்பு வருத்தத்திற்குரியது என்றும், அதிமுக அரசுக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திமுக வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

வேளாண் மண்டல சிறப்பு பாதுகாப்பு சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களும், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்கள் அடங்கும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் துத்தநாக உருக்காலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இளகு இரும்பு ஆலை, அலுமினியம் உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல்பாகங்களை பதனிடும் தொழிற்சாலை, தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, மற்றும் பிற ஹைட்ரோ கார்பன்கள், உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. இந்த சட்டத்தினை மீறி தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் அமைத்தால், 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments