அவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதி விபத்து

0 6407

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் உள்ளிட்ட 21 பயணிகள் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர்  பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான குளிர்சாதன  பேருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 48 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது  கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. அவிநாசி சாலையிலுள்ள பாலம் மீது அதிவேகமாக வந்த லாரி திருப்பத்தில் திரும்பியுள்ளது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருக்கும் சுமார் 1 அடி உயரம் கொண்ட டிவைடரில் லாரி ஏறியது. பின்னர் டிவைடரில் பாதியும், சாலையில் பாதியும் என சுமார் 40 அடி தூரத்துக்கு வேகமாக லாரி சென்றது.

அப்போது லாரியின் பின்பக்க 2 டயர்கள் வெடித்தது. இருப்பினும் அதிவேகமாக ஓடிய லாரி மறுபக்கம் சாலையில் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தில் ஓட்டுநர் அமர்ந்து  இருக்கும் பகுதியையொட்டி பக்கவாட்டில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

கண்டெய்னர் லாரி மோதியதால் கேரள அரசு பேருந்து சுக்கு நூறாக உருக்குலைந்தது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் அனைவரும் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தால் தூக்கத்திலேயே 5 பெண்கள் உள்ளிட்ட 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 28 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை, திருப்பூர் மற்றும் அவிநாசி பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த தகவலின்பேரில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திசா மிட்டல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர்.

விபத்தில் சிக்கி உருக்குலைந்த பேருந்தில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட காட்சி காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது. இந்த விபத்துக்கு தூக்க கலக்கத்தில் கண்டெய்னர் லாரியை அதன் ஓட்டுநர் இயக்கியதாக காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். அவர் பிடிபட்ட பிறகே விபத்துக்கான காரணம் குறித்த முழு விவரமும் தெரிய வரும். விபத்து குறித்து திருமுருகன் பூண்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து முதலில் தப்பியோடி விட்டார். இருப்பினும் பிறகு அவரை போலீஸார் கைது செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போரை கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் சுனில்குமார், பாலக்காடு எம்.பி. ஸ்ரீகண்டன், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி ஆகியோர் நேரில் வந்து பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலமுரளி, பலியானோரில் 19 பேரின் பெயர் உள்ளிட்ட அடையாளம் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments