இனி தனியார் பஸ் அசுர வேகம் எடுக்காது..! பெண்கள் முன்பக்கம் ஏற தடை
கோவையில் அசுர வேகத்தில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்களின் அடாவடி நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் விதமாக முன்பக்கம் ஏறும் பெண் பயணிகளிடம் ஓட்டுனர்கள் பேச தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இருக்கையை சுற்றி அமர்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பேருந்துகளில் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் பெண் பயணி அமர்ந்தால் ஓட்டுனர் செய்யும் குட்டிச்சேட்டைகள் எப்படி இருக்கும் என்பதை சினிமாவில் நகைச்சுவையாக சொல்லப்பட்டதை தினமும் கோவை பேருந்து ஓட்டுனர்கள் அரங்கேற்றி வருவதாக பலதரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன.
கோவை மாநகரைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்துகளில் ஓட்டுனரும் ஒரு நடத்துனரும் மட்டும் இருப்பர். ஆனால், தனியார் பேருந்துகளில் ஓட்டுனரோடு முன் படிக்கட்டில் ஒரு நடத்துனரும், பின் படிக்கட்டில் ஒரு நடத்துனரும் மேலும் ஒரு உதவியாளர் என மூன்று பேர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் செய்யும் அலப்பறைகள் சொல்லிமாளாது..!
சென்னையில் பேருந்தின் இடது பக்கத்திலும், கடைசி வரிசையிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதை போல கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பெரும்பலான பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் முன் பக்கம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் பேருந்தில் ஓட்டுனரின் இருக்கையின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெண் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது மாநகர பேருந்தில் மட்டுமின்றி, புறநகர்ப் பேருந்திலும் இதே நிலை தான்...!
பெண்கள் பக்கவாட்டிலும், பின் புறத்திலும் அமர்வதால் ஓட்டுனர்கள் தங்களை ஒரு கதாநாயகனாக கருதிக்கொண்டு கூலிங்கிளாஸ் அனிந்து கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் சத்தம் அதிகமான ஹார்ன்களை அடித்தவாறே பேருந்துகளை இயக்குவதால் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோவையை பொறுத்தவரை பெரும்பாலும் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் ,வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்துகளை பயன்படுத்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் தான் இது போன்ற அசுர அட்டகாசங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் போக்குவரத்து புலனாய்வு போலீசார்.
அது மட்டுமல்லாமல், பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் கவர்வதற்காக பேருந்துகளில் சினிமா குத்து பாடல்களையும், இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களையும் அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டுக்கொண்டு செல்வதால் வயதானவர்கள் முகம் சுழித்துக்கொண்டே பயணம் செய்து வருகின்றனர்.
எனவே கோவையில் போக்குவரத்து விதி முறையில் மாற்றம் கொண்டு வந்து, பேருந்துகளில் முன் பக்கம் ஆண்கள் அமரகூடிய வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் தான் விபத்துகள் குறையும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் பேருந்தின் முன்பக்கம் பெண் பயணிகளை அமரவைப்பதை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் ஓட்டுனர் இருக்கை அருகே பெண் பயணிகள் அமரும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஓட்டுனர் பேசக்கூடாது என்றும் அதிரடி உத்தரவிட்டு ஓட்டுனர்களுக்கு செக் வைத்திருக்கிறது.
Comments