இந்தியன் 2” படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

0 2790

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் கமலஹாசன் மற்றும் லைகா நிறுவனத்தின் சார்பில் 3 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் இரவு பகலாக தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

புதன் கிழமை இரவு சண்டைக் காட்சியை படமாக்குவதற்குப் பிரமாண்ட லைட்டிங்ஸ் அமைப்பை சுமார் 45 அடி உயரத்தில் தாங்கிப் பிடித்தபடி நிறுத்தப்பட்டிருந்த கிரேன், திடீரென விழுந்ததில் ஊழியர்கள் பலரும் அடியில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா, புரடக்சன் உதவியாளர்கள் சந்திரன் மற்றும் மதுசூதனராவ் ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களுக்கு நடிகர் கமலஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இது முதலுதவி என்றும், இனி படப்பிடிப்புகளில் ஊழியர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதே சிகிச்சையாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 2 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் 3 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 34 வயது நிரம்பிய உதவி இயக்குனர் கிருஷ்ணா, பிரபல கார்டூனிஸ்டு மதனின் மருமகன் ஆவார். கமலஹாசன் இயக்கிய விஸ்வரூபம் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இதேபோல ஆந்திராவை சேர்ந்தவரும், 27 வயது இளைஞருமான மது, பல படங்களில் புரடக்சன் உதவியாளராக பணியாற்றியவர். விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான சந்திரன், தென்னிந்திய திரைப்பட மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். 58 வயதான அவர், புரடக்சன் உதவியாளராக மிகுந்த அனுபவம் கொண்டவர். 

விபத்து நடந்த போது உணவு இடைவேளை என்பதால், பலரும் உயிர் தப்பியதாகவும், விபத்திற்கு கிரேன் ஆப்ரேட்டரின் அலட்சியமே முக்கிய காரணம் எனவும் நேரில் பார்த்த சக ஊழியர்கள் கூறுகின்றனர். கிரேனின் சக்கரங்கள் லாக் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை விடுவிக்காமல் ஆபரேட்டர் ராஜன் கிரேனை இயக்கியபோது பெரும் அதிர்வு ஏற்பட்டு கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தானியங்கி அம்சங்களை கொண்ட சீனத் தயாரிப்பு கிரேன் தற்போது அதிக அளவில் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் அதை இயக்குவதற்கு போதிய அனுபவமில்லாத, ஆபரேட்டர்களை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

பிகில் படப்பிடிப்பின்போது, ஈவிபி படப்பிடிப்பு தளத்தில், இதே வகையிலான கிரேன் விபத்துக்குள்ளானதில் செல்வம் என்ற ஊழியர் பலியானதையும் சக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது விபத்து ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்துதல் 388, 287, 304 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆப்பரேட்டர் ராஜனை போலீசார் தேடிவருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments